உத்திர பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள மோடி நகரில் விகாஸ் – சோனியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விகாஸ் கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியா கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்  சோனியா கழுத்தை அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்து விகாசை காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அப்போது விகாசின் செல்போனை பரிசோதித்துள்ளனர். அதில் கூகுளில் கொலை செய்வது எப்படி? எங்கிருந்து துப்பாக்கி வாங்கலாம்? என்பது போன்ற இணைய தேடல்களை அவர் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் பிலிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து விஷம் வாங்க முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. “திருமணமான சில வருடங்களுக்குப் பின் விகாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் சோனியாவிற்கும், விகாசிற்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விகாஸ் சோனியாவை கொலை செய்ய அவரது பெண் தோழியுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விகாசை கைது செய்துள்ளனர். மேலும் அவரது பெண் தோழியை  விரைவில் கைது செய்வோம்” என தெரிவித்துள்ளனர்.