சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி தேவகோட்டை அருகே உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதேபோல் காரைக்குடி பாரதிநகரை சேர்ந்த பசுபதி(22), தேவகோட்டை சேர்ந்த பாலகணேஷ்(19) இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள். இதில் பானகனேஷ் என்றவர் அந்த மாணவியுடன் படித்து வந்த வகுப்பு தோழன். இந்நிலையில் பாலகணேஷ் மூலமாக அவருடைய நண்பரான பசுபதியும் அந்த மாணவிக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த மாணவி இரண்டு பேரிடமும் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார்.
ஆனால் அந்த மாணவர்கள் இரண்டு பேரும் நட்பை தவறாக பயன்படுத்தி மாணவியை தனிமையில் சந்திக்க வருமாறு வற்புறுத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த மாணவி தற்கொலை முடிவு எடுத்து எலி மருந்தினை சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த அவருடைய குடும்பத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இது குறித்து காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் காரைக்குடி தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் பசுபதி, பாலகணேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பத்தூர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.