தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதிலிருந்து ஆளும் திமுகவுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு நிலவுகிறது. சட்டசபை கூட்டத்தின் போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில வார்த்தைகளை நீக்கியும் தானாக சில வார்த்தைகளையும் சேர்த்து ஆளுநர் பேசியதால் முதல் ஸ்டாலின் உடனடியாக எழுந்து ஆளுநரின் உரையை நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். அதன்படி சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில் திமுக கட்சியின் எம்பிக்கள் ஜனாதிபதியிடம் ஆளுநர் மீது புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஆளுநர் டெல்லிக்கு தன்னுடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற நிலையில் தற்போது இன்று மீண்டும் இரண்டாவது முறையாக டெல்லி சென்றுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டு விவகாரங்கள் குறித்து ஆளுநர் பேச இருப்பதாகவும், ஜனாதிபதியிடம் கொடுத்த புகார் குறித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் இரண்டாவது முறையாக டெல்லிக்கு செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.