கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி மதுரைக்கு சென்று வந்துள்ளார். இவர்கள் இருவரும் கணவன் மனைவி போல் குடும்பம் நடத்திய  நிலையில் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் அதை பார்த்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் பெண் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது கள்ளக்காதல் குறித்து தன் மனைவியிடம் அவர் கேட்டுள்ளார்‌. இதில் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் வீட்டில் உள்ள சிறிய குழவி கல்லால் தன் மனைவியை கோபத்தில் தாக்கியுள்ளார். இதில் அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஒரே நேரத்தில் ஒரு பெண் கணவன் மற்றும் கள்ளக்காதனுடன் ரகசியமாக குடும்பம் நடத்தியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.