நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. முதல் நாளான இன்று அவை தொடங்கிய உடனேயே கோவை மாணவர் அமுதன் கொலை வழக்கு, கர்நாடகாவில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தால் அவையில் கடும் அமளியும் காரசார விவாதமும் வெடித்தது.
அவையில் இதுகுறித்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் 20 போரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், “இது கோஷ்டி மோதல் அல்ல; போதைப்பொருள் கும்பல் குறித்த தகவல் தெரிவித்ததால் நடத்தப்பட்ட படுகொலை. அரசின் அலட்சியமும் காவல்துறையின் பொறுப்பற்ற போக்கமுமே இதற்குக் காரணம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், எண்ணூர் ஆற்றில் மீன்கள் செத்து மடிந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும் அரசின் கவனத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அமுதனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், 25 பேர் சேர்ந்து ஒரு மாணவனை அடித்துக் கொல்வது எப்படி கோஷ்டி மோதலாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கத்தை அரசு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில், கோவை மாணவர் கொலை வழக்கில் காவல்துறையின் விளக்கம் ஏற்புடையதல்ல என்றும், கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், “மாணவர் கொலை வழக்கு போதைப்பொருள் புகார் தொடர்பானது அல்ல; உண்மை நிலவரத்திற்கு மாறாக வழக்கைத் திசை திருப்ப வேண்டாம். மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையை மறைக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பாதிக்கப்பட்ட மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், “பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குழந்தைகள். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; இனி இதுபோல எந்தச் சம்பவமும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் அரசு தீவிரமாகக் கவனம் செலுத்துகிறது” என்றார்.
விவாதத்தின் போது, போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார், போதை பொருள் பயன்படுத்திய ஜாபர் சாதிக் மீது திமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ஜாபர் சாதிக் விவகாரத்தில் கட்சி உடனே நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஐபிஎல் மேட்ச் நடைபெறும்போதே ஒருவர் பவுடரை நொறுக்கிவிட்டு மாத்திரையை நொறுக்கியதாக கதை விட்டாரே அது தொடர்பாக அமைச்சரிடம் விசாரணை நடைபெற்றதா காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் பேசுகையில், அந்த நிகழ்வு குறித்தான விளக்கத்தை ஏற்கனவே அளித்துவிட்டதாகவும், அதுகுறித்த சர்ச்சைகள் தேவையற்றது. மேலும் அப்படி பார்த்தால் ஐபிஎல் மேட்ச் நடைபெறும்போது திமுக தான் ஆட்சியில் இருந்தது. அவர்கள் ஆட்சியில் மைதானத்தின் வாசலிலேயே போதைப்பொருள்கள் விற்பனை செய்தார்களா என்று கேள்வி எழுப்பினார்.
