தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே அறந்தாங்கி முக்கம் கொண்டிக்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு ஆட்டோக்களை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் ஒரு சரக்கு ஆட்டோவில் இருந்த டிரைவர் உட்பட இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்றொரு ஆட்டோ டிரைவரான அலாவுதீன் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்நிலையில் போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் ஒரு சரக்கு ஆட்டோவில் இருந்து 50 கிலோ எடை கொண்ட 48 மூட்டைகளில் 2,400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மற்றொரு ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 54 மூட்டைகளில் 2,700 கிலோ அரிசி இருந்தது  தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து  போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை விற்பனை செய்வது  தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு சரக்கு ஆட்டோகளில்  இருந்தும் 102 மூட்டைகளில் இருந்த 5,100 டன் ரேஷன் அரிசியையும் இரண்டு சரக்கு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் அலாவுதீனை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் வலை வீசி  தேடி வருகின்றனர்.