திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பயங்கரவாத அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக சிறப்பு பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் வழி பாதையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்லும் வழியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் திருமலை கோவிலில் அமைந்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமலை கோவிலை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பதற்கு கோவில் கோபுரத்தை சுற்றி மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டதைப் போல் தெரிகிறது. யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
இப்படி ட்ரோன் கேமரா மூலமாக திருமலை திருப்பதி கோவிலை படம் பிடிக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த வீடியோ பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் கோவிலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அந்த வீடியோவை தேவஸ்தான தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர் தடவியல் துறை போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருமலை போலீசாரிடம் தேவஸ்தானம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் வீடியோவின் உண்மை தன்மை என்ன? அது எங்கிருந்து எடுக்கப்பட்டது? யாரால் எடுக்கப்பட்டது? போன்ற பல்வேறு விஷயங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த குழு ஒன்று ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.