குடியரசு தின விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென் மாவட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 25-ஆம் தேதி இரவு 10:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. அதே ரயில் மறு மார்க்கத்தில் ஜனவரி 29-ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 4:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேர்கிறது.

இந்த ரயில் விருதாச்சலம், விழுப்புரம், விருதுநகர், மதுரை, சாத்தூர், திருச்சி, கோவில்பட்டி, திண்டுக்கல், திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் இரண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டிகள் போன்றவை இணைக்கப்படுகிறது.

அதேபோல் தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் தாம்பரத்திலிருந்து ஜனவரி 26 அன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. அதே ரயில் மறு மார்க்கத்தில் ஜனவரி 27-ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு சென்னை – எழும்பூர் சென்றடைகிறது. இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஆறு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டணம் மூன்றடுக்கு  படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு  பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டணம் மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டி போன்றவை இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் மானாமதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம், சிவகங்கை, விருதாச்சலம், திருச்சி, காரைக்குடி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, அருப்புக்கோட்டை போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. சென்னை -எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் கூடுதலாக தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.