பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி 152 நபர்களிடம் போலி கணக்கில் மோசடி செய்த இரண்டு பேரை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு ஆன்லைனில் பங்கு சந்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என செல்போனில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை நம்பிய அருண்குமார் பல தவணைகளாக 34 லட்சம் ரூபாய் வரை ஆன்லைனில் செலுத்தியதாக தெரிகிறது.
பணம் செலுத்திய பிறகு உரிய ரெஸ்பான்ஸ் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண்குமார் கோயம்புத்தூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவல் அடிப்படையில் தனசேகரன் மற்றும் ரவிச்சந்தர் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இவர்கள் இருவரும் பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 152 பேர்களிடம் கோடி கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இருவரிடம் இருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக்கணக்கான காசோலைகள், கிரெடிட் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.