கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் அருள்-கலைத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கலைத்தாய் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக கலைதாயும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஹரிச்சந்திரனும், நெருக்கமாக பழகி உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைத்தாய் அவரிடம் இருந்து 2 லட்ச ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பி செலுத்தவில்லை. பணத்தை கேட்ட போது சரியாக பதில் அளிக்காமல் கலைத்தாய் வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் ஹரிச்சந்திரன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனாலும் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் கோபமடைந்த ஹரிச்சந்திரன் கலைத்தாயை கொலை செய்வதற்காக கந்தர்வக்கோட்டையை சேர்ந்த பிரசாந்த் என்பவரின் உதவியை கேட்டுள்ளார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து திட்டம் போட்டுள்ளனர். கடந்த 13-ஆம் தேதி கலைத்தாய் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அரிச்சந்திரன் பிரசாந்த்துடன் அங்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அரிச்சந்திரன் பிரசாந்த்துடன் இணைந்து கலை தாயை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைத்தாயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.