தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர்.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?

மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். ஆயினும் மக்கள் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்து நிற்பதே நமது மக்களரசியல் நிலைப்பாடு என்பதால் இதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என கூறியுள்ளார்.