ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவன் மகன் சஞ்சய் போட்டிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனை பொருத்தவரை 74 வயதாகிறது. எனவே அவர் உடல்நிலையை காரணம் காட்டி தேர்தலில் நிற்க மறுப்பதாகவும், அவருடைய இளைய மகன் அந்த தொகுதிக்கு பரிச்சயமானவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். கே.என் நேரு, முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் முத்துசாமி பொறுப்பு அமைச்சராக திமுகவில் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலையிலிருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர்கள் கே.என் நேரு, முத்துசாமி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியினுடைய வேட்பாளராக இளைய மகன் சஞ்சய் சம்பத் இளங்கோவன் களமிறங்கலாம்.
சஞ்சய் இளங்கோவன் வெளிநாடுகளில் படித்தவர், கல்வி அறிவுள்ளவர், திருமகன் ஈவேராவுடைய சகோதரர் என்பதால் அனுதாப வாக்குகள் அதிகம் இருக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரை பொறுத்தவரை ஈரோடு பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.