தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் எம்.பி யுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்திருந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் விட்டுக் கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதிமுகவில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுகிறதா அல்லது பன்னீர்செல்வம் அணி போட்டியிடுகிறதா? பாஜக தனித்துப் போட்டிடுமா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிட விருப்பமாக இருப்பது போலவே ஓபிஎஸ் அணி போட்டியிட போவதாக இன்றைய தினம் காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனை நேரில் சென்று சந்தித்து ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ் தலைமையில் வைத்திலிங்கம், கு.ப கிருஷ்ணன், பிரபாகர், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாலை 4 மணிக்கு பாஜக தலைவர் அண்ணாமலையை ஓபிஎஸ் அணி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் இதர கட்சிகளான தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தியையும் சந்தித்து பேசவுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.. வேட்புமனு தாக்கல் 31 ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.