ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு தலி பான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் பல்வேறு விதமான பழமை வாய்ந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பர்தா அணியாமல் வெளியே வரக்கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளியே வரக்கூடாது, ஆண் மருத்துவரிடம் பெண்கள் மருத்துவம் பார்க்க கூடாது, பெண்கள் உயர் கல்வி படிக்கக் கூடாது போன்ற பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகிறார்கள். இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தலிபான்கள் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல் கட்டுப்பாடுகளை விதித்து கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றினை தலிபான்கள் விதித்துள்ளனர்.

அதாவது ஆப்கானிஸ்தானில் இனி கருத்தடை சாதனங்கள் எதுவும் விற்பனை செய்யக்கூடாது என தலிபான்கள் புதிய உத்தரவினை போட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வராவிட்டாலும் வீடுகள் மற்றும் மருந்தகங்களுக்கு நேரடியாக சென்று கருத்தடை சாதனங்கள் வைத்திருக்கக் கூடாது என எச்சரித்து வருகின்றனர். முஸ்லிம் மக்கள் தொகையை குறைப்பதற்கு மேற்கத்திய நாடுகள் செய்த சதித்திட்டம் தான் கருத்தடை மருந்துகள் என்று தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த செயலுக்கு அந்நாட்டு மக்களிடம் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் கருத்தடை மருந்துகளுக்கு தடை விதித்தால் பேறுகால இறப்புகள் அதிக அளவில் நேரிடும் என உலக நாடுகள் எச்சரித்துள்ளது.