நாடு முழுவதும் 81.3 கோடி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், புத்தாண்டு நாளான இன்று (ஜனவரி.1) முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

இதையடுத்து முதல் வாரத்தில் தினசரி 3 ரேஷன் கடைகளுக்கு சென்று மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்குமாறு இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ) பொது மேலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தினசரி அறிக்கைகள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றை அடுத்து 6 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியபோது PMGKAY மிகவும் பயன் உள்ளதாக இருந்ததாக கூறப்பட்டது. இது 6 மாதங்கள் தடைபட்டாலும் 2022ல் துவங்கி 28 மாதங்கள் வரை அடிக்கடி நீட்டிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் குறிப்பின் படி PMGKAY துவங்கப்பட்டதிலிருந்து டிசம்பர் 2022 வரை அதன் ஒட்டு மொத்த செலவு ரூபாய். 3.91 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.