சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.கே.விஜயபாஸ்கர் விராலிமலை – துவரங்குறிச்சி இடையே முறையான பேருந்துகள் இயக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலை – துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ மீட்டர். இது மதுரை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழித்தடம் என்ற காரணத்தினால் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் 3 நகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்குவது பற்றி முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், இதுவரை 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகர் பேருந்துகளில் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் படி இலவச பயணம் செய்து வருகின்றனர். தினசரி 40 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இது பெண்களுக்கு மிகவும் பயனளிக்கும் ஒரு திட்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மீண்டும் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியபோது, கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியும் பல்வேறு வழித்தடங்களில் இன்னும் இயக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.