தமிழக அரசு தற்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவுப்பொருட்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட், 100 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் இந்த பொருட்களை விற்பனை செய்வதும் வாங்குவதும் குற்றமாகும். மேலும் இது குறித்த புகார்களை http.tnpcb.gov.in.contact-php என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கலாம். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இதனை பயன்படுத்துவதை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னமும் சில தொழிற்சாலைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதும் அதனை வாங்கி பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள பகுதிகளில் ஏதேனும் தொழிற்சாலைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது தெரிய வந்தால் மேற்கண்ட இணையதள முகவரியில் புகார் கொடுக்கலாம். மேலும் அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது அதனை வாங்கி பயன்படுத்தினாலும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.