தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. நாட்டின் ஊழல்மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் என்று கூட சொல்வேன்” என அவர் தெரிவித்தார்.

இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேசவேண்டும். கூட்டணி தர்மம் இன்றி அண்ணாமலை செயல்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது மனுஷனை கடிக்கும் கதையாகவே அவர் செயல்படுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவர் விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்க செயல். அண்ணாமலை வரலாறு தெரியாமல் கத்துக் குட்டி போன்று செயல்படுகிறார்” என கூறினார்.