
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்து விட்டார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு ஆளுநரை வெளியேறுமாறு கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரின் உரைக்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இது சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம் என்றார். அதோடு அச்சிடப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்து விட்டு சென்றார்.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு ஆளுநரின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயர் ஆளுநர் உச்சரிக்காதது வருத்தமான வேதனை. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. மத்திய அரசை திருப்தி படுத்தினால் ஏதாவது உயர் பதவி கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். தேர்தல் நடக்க இருக்கிற பீகார் மாநிலத்திற்கு முதலமைச்சர் வேட்பாளராக நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது. தமிழ்நாடு ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது. தேசிய கீதம் படிக்கும் முன்பே வெளியேறி நாட்டை அவமானப்படுத்தி விட்டார். மேலும் இது மிகப்பெரிய குற்றம் என்று கூறினார்.