அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறே இந்த வருடமும் வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதால் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து சேலம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியுள்ளதாவது, சேலம் கோட்டம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கியது. ஆகவே சேலம் கோட்டம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் சேலத்தில் இருந்து வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, கரூர்,சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, ஓசூர் போன்ற பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் சேலம் மண்டலம் சார்பில் சேலம், நாமக்கல்லில் இருந்து 300 சிறப்பு பேருந்துகளும், தர்மபுரி மண்டலம் சார்பில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.