தஞ்சாவூரில் விளையாட்டு போட்டியின் போது மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் வானம்பாடி மேல் தெருவில் அறிவழகன் -சந்திரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் நித்திஷ் (13) அங்குள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் சோழபுரம் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு சம்பவத்தன்று  விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் சைக்கிள் போட்டி மற்றும் ஓட்டப்பந்தயத்தில் நித்திஷ் கலந்து கொண்டான்.

அதன் பின் சிறிது நேரம் கழித்து பலூன் உடைக்கும் போட்டி நடைபெற்றது. இதனை நித்திஷ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தான். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நித்திஷ் உயிரிழந்துள்ளார். இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.