ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஜர்பைஜான் நாட்டின் தூதரகத்தில் நேற்று முன்தினம் காரில் வந்த மர்மநபர்  தூதரகம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஊழியரின் கார் மீது மோதியுள்ளார். அதனை தொடர்ந்து காரிலிருந்து துப்பாக்கியுடன் இறங்கிய அந்த மர்மநபர்  தூதரகத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். இந்நிலையில் தூதரகத்தின் தலைமை பாதுகாவலர் மற்றும் பிற பாதுகாவலர்கள் அவரை தடுக்க முயற்சி செய்தபோது அவர்களை அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் தலைமை காவலர் உட்பட மூன்று பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மற்ற பாதுகாவலர்கள் அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பாதுகாவலர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் வெளியிட்ட twitter பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, தூதரக பணிக்கு எதிரான இந்த தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இது குறித்து விரைவான விசாரணை நடத்தி குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஈரானில் அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.