தமிழகத்தின்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு,  தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் ஜெயக்குமார் கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புத்தாண்டு தினத்தன்று அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு என்பது 1.1.2023 முதல் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது மிகுந்த மன வேதனையை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு  2022 -ம் ஆண்டு  ஜூலை  முதல் அகவிலைப்படி உயர்வை  வழங்கியது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு  2022-ம் ஆண்டு  ஜூலை  1 முதல் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு, ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இச்செய்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். மேலும் அகவிலைப்படி உயர்வை 2022 ஜூலை  1 முதல் வழங்கிட வேண்டும். இதையடுத்து தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.