திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மைதீன்(28) மார்த்தாண்டம் அருகே இருக்கும் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கடையில் நாங்குநேரியைச் சேர்ந்த நாகூர் மீரான்(18) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மைதீனும், நாகூர் மீரானும் மார்த்தாண்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஆற்றூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் உண்ணாமலை கடை பகுதியில் சென்ற போது செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மைதீனில் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வராஜ் மற்றும் நாகூர் மீரானை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.