விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிக்குப்பம் கணேஷ் நகர் பகுதியில் இருக்கும் முட்புதரில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் தென்காசி மாவட்டத்தில் உள்ள கருவந்தா சோலைசேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பெஞ்சமின்(28) என்பது தெரியவந்தது. இவர் சென்னை அண்ணா நகரில் தங்கி இருந்து ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அவ்வபோது ஊருக்கு சென்று வந்த பெஞ்சமின் உறவுக்கார பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார்.

ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர் தங்களது மகளை பெஞ்சமனுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து, வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். இதனை அறிந்த பெஞ்சமின் மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல், மது அருந்தியுள்ளார். கடந்த 14-ஆம் தேதி பெஞ்சமின் குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மறுநாள் ஊருக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி பெஞ்சமின் விக்கிரவாண்டி சுங்க சாவடியை கடந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது தனது காதலியை கரம் பிடிக்க முடியவில்லை என்ற மன உளைச்சலில் முட்புதருக்குள் இறங்கி பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.