கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வழக்குபாறை கண்ணமநாயக்கனூர் அம்மன் வீதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலையாட்களை வைத்து காண்டிராக்ட் முறையில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவருக்கு கலாமணி என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன்(22) என்ற மகனும், ஸ்ரீமதி(23) என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று சரவணன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிங்கையன்புதூர்- வடபுதூர் இடையே தனியார் டீ தூள் கம்பெனி அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. மேலும் மோட்டார் சைக்கிளும் சரவணனும் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே சரவணன் உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். பின்னர் சரவணனின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.