தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரில் ஒண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒண்டி யுவராஜாவின் செல்போனை வாங்கினார். இதனையடுத்து செல்போனை தருமாறு யுவராஜா பலமுறை கேட்டார். ஆனால் ஒண்டி செல்போனை கொடுக்கவில்லை.

இதனால் ஒண்டியிடம் பேசி தனது செல்போனை வாங்கி தருமாறு நண்பரான வினோத் குமாரிடம் யுவராஜா தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் வார சந்தை நடைபெறும் பகுதியில் ஒண்டியும், அவரது நண்பர்களும் இருந்தனர். அப்போது யுவராஜா செல்போனை வாங்கி தருமாறு வினோத்குமாரை அங்கு அழைத்துச் சென்றார்.

அங்கு இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் கோபமடைந்த ஒண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த வினோத் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஒண்டி மற்றும் அவரது நண்பர்களை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து வினோத்குமாரின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.