திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டின் இறுதி நாளில், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாவு ரத்தையா என்ற பக்தர், ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ஆனால், இந்தக் காணிக்கையை வெறும் கோவிலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், ஒரு நல்ல காரியத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
தாம் வழங்கிய ஒரு கோடி ரூபாய் காணிக்கையை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்விச் செலவிற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வசதி குறைந்த மாணவர்களின் கல்விக்கு இது உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்.
புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இறைவனுக்குச் செலுத்தும் காணிக்கையைச் சமூக நலனுக்காகப் பயன்படுத்தச் சொன்ன அந்தப் பக்தரின் செயலைத் தேவஸ்தான அதிகாரிகளும், மற்ற பக்தர்களும் பாராட்டி வருகின்றனர்.
