
சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் பல ஆச்சரியமான விஷயங்கள் ஒளிந்துள்ளன. அந்த வகையில் இது போன்று ஒரு ஆச்சரியமான நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வானில் ஓர் வால் நட்சத்திரம் இந்திய விண்வெளியில் பயணித்து, கடந்து செல்ல இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்திற்கு சி/2023 ஏ3 என வானியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த வால் நட்சத்திரத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆண்டில் செப்டம்பர் 28 இல் சூரியனுக்கு மிக அருகில் இந்த வால் நட்சத்திரம் சென்று உள்ளது. அதன் பிறகு இந்த வால் நட்சத்திரத்தின் பயணம் திசை மாறி உள்ளது.
இதன் காரணமாக இந்த அதிசய வால் நட்சத்திரத்தை நம்மால் காண முடியும். இந்த வால் நட்சத்திரம் இனி 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் தான் வரும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். எனவே இது மிக அரிதாக கருதப்படுகிறது. இதன்படி இந்த வால் நட்சத்திரத்தை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தெளிவாக காண முடியும். இந்த வால் நட்சத்திரத்தை பைனா குழல் அல்லது தொலைநோக்கிகள் மூலம் பார்க்கும்போது இந்த நட்சத்திரத்தின் நீண்ட வால் போன்ற பகுதியை தெளிவாக காண முடியும்.
இந்த நட்சத்திரத்தை பார்ப்பதற்கான நேரத்தை வானியலாளர்கள் கூறியுள்ளனர். இதில் காலைப் பொழுதில் சூரியன் உதிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கிழக்கு திசைக்கு கீழ் காணலாம். இதேபோன்று சூரிய மறைவிற்குப் பின்பு மேற்கு திசையிலும் இதனை காண வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த வால் நட்சத்திரம் இந்தியாவில் தமிழகம், லடாக், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மிகத் தெளிவாகக் காணலாம். இந்தப் பகுதியில் வானியலாளர்கள் பலரும் இந்த வால் நட்சத்திரத்தை பார்த்து அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.