தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த அருணா தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலை சேர்ந்த ஜெயந்தன் என்பவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில் பிளஸ்டன் மற்றும் அவரது நண்பர்களான லிஜோ, டேனி வாஸ், ஆகாஷ்ராஜ் ஆகியோரை துபாயில் வேலைக்கு சேர்க்க முயற்சி செய்து ரூபாய் 12 லட்சம் வரை ஜெயந்தனிடம் அருணா கொடுத்துள்ளார்.
அதனை பெற்றுக் கொண்ட அவர் பிளஸ்டன் லிஜோ ஆகிய 2 பேரையும் சுற்றுலா விசாவில் துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் எந்த வேலையும் வாங்கி கொடுக்க வில்லை. அதோடு மற்ற இருவரையும் துபாய்க்கு அனுப்பாமல் இருந்துள்ளார். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டது அறிந்த அருணா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பெயரில் மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் ஜெயந்தன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.