இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜீத் கவுர் என்ற சீக்கியப் பெண் பக்தர், குருநானக் தேவ் அவர்களின் ‘பிரகாஷ் பர்வ்’ விழாவைக் கொண்டாடுவதற்காகச் சீக்கிய யாத்ரீகர்கள் குழுவுடன் நவம்பர் 4ஆம் தேதி வாகா-அட்டாரி எல்லை வழியாகப் பாகிஸ்தான் சென்ற நிலையில், திடீரென காணாமல் போனார்.

யாத்ரீகர்களின் குழு நவம்பர் 13ஆம் தேதி இந்தியாவுக்குத் திரும்பியபோது இவர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, சரப்ஜீத் கவுர் இஸ்லாம் மதத்தைத் தழுவி, ஒரு பாகிஸ்தான் நபரைத் திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது.

கபூர் தலா மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதுடைய சரப்ஜீத் கவுர், இஸ்லாம் மதத்தைத் தழுவிய பின் தன் பெயரை ‘நூர்’ என்று மாற்றிக் கொண்டார். பின்னர், அவர் லாகூருக்கு அருகிலுள்ள ஷேக்குபுராவைச் சேர்ந்த நசீர் ஹுசைன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டதற்கான உருது மொழியில் எழுதப்பட்ட ‘நிக்காஹ் நாமா’ (திருமண ஒப்பந்தம்) ஆவணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விவாகரத்து பெற்று, இரண்டு மகன்களின் தாயான இவரின் பாஸ்போர்ட்டில் முன்னாள் கணவருக்குப் பதிலாகத் தந்தையின் பெயர் மட்டுமே உள்ளது. இந்திய அதிகாரிகள், இந்தச் சம்பவம் குறித்துச் சரப்ஜீத் கவுரின் சொந்த கிராமத்தில் விசாரணை நடத்தி, மேலதிகத் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.