அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மக்களவைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லாததால் அது தொடர்பான அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படும். ஓபிஎஸ் கட்சி நடத்தவில்லை. கடை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதிமுக கட்சியின் கொடி மற்றும் சின்னம் போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்துவது தொடர்பாக விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை தவிர்த்து அங்கிருந்து யார் வந்தாலும் நாங்கள் தாயுள்ளத்தோடு ஏற்றுக் கொள்வோம் என்று கூறினார். அதன் பிறகு பாஜக-அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார். மேலும் ஆன்லைன் ரம்மியை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்பதில் அதிமுகவுக்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது என்றும் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு தான் அதிகாரம் இருக்கிறது என்பதை ஆளுநருக்கு தெளிவுபடுத்த திமுக அரசு தவறிவிட்டது என்றும் கூறினார்.