அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு மாத காலத்திற்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில் அதிமுக ஆட்சியின் சிறப்பு அம்சங்களையும், திமுக ஆட்சியின் அவலங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பிறகு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவில்லை. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லாததால் அது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நாங்கள் கூறிய நிலையில் இனி அதுபோன்று நடக்காது என பாஜக நிர்வாகிகள் உறுதி கொடுத்துள்ளதால் நாங்கள் அதை நம்புகிறோம். டுவிட்டரில் கட்சியினர் மோதிக் கொள்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.

இதேபோன்று ஜெயலலிதா பற்றி கூறியது அண்ணாமலையின் தனிப்பட்ட விருப்பம். மேலும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் விரிசலும் கிடையாது. மக்களவை தேர்தலில் கூட்டணி தொடரும் என்று கூறினார். நேற்று வரை அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய பிறகு திடீரென மாறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.