கோவை வ.உ.சி. மைதானத்தில், வ.உ.சிதம்பரனார் சிலை முன்பு நடைபெற்ற ‘வந்தே மாதரம்’ பாடல் பாடும் நிகழ்ச்சியில், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் பாடல் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்தப் பாடல் தேர்தல் பிரசார வரிகள் நிறைந்ததாகவும், எல்லா மதங்களையும், மொழி பேசுபவர்களையும் இணைப்பது போல இருப்பதாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். இதற்குப் பதிலளித்த வானதி சீனிவாசன், “சினிமா பாடலை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்துவது என்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. அரசியலும், சினிமாவும் நெடுங்காலமாக ஒன்றாகப் பயணித்து வருகின்றன. ஒரு சினிமா நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும்போது, அதை எப்படியாவது தனது அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தத்தான் நினைப்பார்.
இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆனால், விஜய் தி.மு.க.வை வீழ்த்தப்போவதாகப் பேசுகிறார். தி.மு.க.வை எப்படி அவர் தனியாக வீழ்த்த முடியும்? அதற்கு அவருக்கு என்ன பலம் இருக்கிறது? என்ன திட்டம் இருக்கிறது என்று தெரியவில்லை. தி.மு.க. மாற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாடலில் ‘ஒன்றாகச் சேரு, ஒன்றாகச் சேரு’ என்று சொல்கிறார். எல்லா பாஷைகளும் வேறு வருகின்றன. ஆனால், அவர் ஒன்றாக யாருடன் சேரப் போகிறார்?” என்று கேள்வியெழுப்பினார்.
