சாதாரணமாக, ஒருவர் குற்றம் செய்தால் அவருக்கு சிறைத்தண்டனை அல்லது பிரம்படி போன்ற சட்டரீதியான தண்டனைகள் வழங்கப்படும். ஆனால், குற்றவாளியை நடனமாடச் சொன்ன விசித்திரமான தண்டனையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சமீபத்தில் அசாம் மாநிலம், சிவசாகர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரையும் சிரிக்க வைத்துள்ளது. தாயாலி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளம் திருடர்களைப் பிடித்துள்ள உள்ளூர் மக்கள், அவர்களைத் தண்டிக்க முடிவு செய்தனர்.

 

அதன்படி, அவர்கள் இருவரையும் இரண்டு மணி நேரம் தொடர்ந்து நடனமாடச் சொல்லி, இந்தச் சம்பவத்தை ஒரு வீடியோவாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த அசாம் வைரல் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில், இரண்டு இளைஞர்களும் சுட்டெரிக்கும் வெயிலில் அசாமின் பிரபலமான பாடகர் ஜூபின் கார்க்-இன் பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். இருவருமே மிகுந்த சோர்வுடன் காணப்பட்டாலும், அவர்களைச் சூழ்ந்திருந்த கிராம மக்கள் தொடர்ந்து அவர்களை நடனமாடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

அத்துடன், பலர் தங்கள் கைபேசிகளில் இந்தக் காட்சியைப் பதிவு செய்துள்ளனர். நீண்ட நேரம் கட்டாயப்படுத்தி நடனமாடியதால், இரு திருடர்களும் சோர்வில் துவண்டுபோன நிலையில், மனிதநேயத்துடன் செயல்பட்ட உள்ளூர் மக்கள், அவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் அளித்து, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இது போன்ற தண்டனையைத் தாங்கள் இதற்கு முன் பார்த்ததில்லை என்று நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.