உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீதுத் திருமணம் நடந்த உடனேயே ஆரம்பித்து, நீடித்த உடல் மற்றும் பாலியல்ரீதியானத் தாக்குதல், சித்திரவதை, கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் கொலை முயற்சி போன்ற பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 24, 2024 அன்று மீரட்டைச் சேர்ந்த டேனிஷ் என்பவரைத் திருமணம் செய்த அந்தப் பெண், தனது கணவர் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி தன்னைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சூதாட்டத்திற்கு அடிமையான தன் கணவர், ஒரு கட்டத்தில் தன்னையே பந்தயம் வைத்ததாகவும், அதில் அவர் தோற்றதால், உமேஷ் குப்தா, மோனு, அன்ஷுல் உட்பட 8 பேர் தன்னை வன்புணர்வுக்கு ஆளாக்கியதாகவும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
மேலும், வரதட்சணைக்காகச் சித்திரவதை செய்த மாமனார் யாசின், நாத்தனார் கணவர் ஷௌக்கீன், கணவரின் அண்ணன் ஷாஹித் ஆகியோரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்ப்பமானபோது கட்டாயக் கருக்கலைப்பு செய்ததோடு, தன் கால்களில் ஆசிட்டைக் கொட்டி, பின்னர் கொல்வதற்காக ஆற்றில் தள்ளியதாகவும் அப்பெண்மணி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவ்வழியே சென்றவர்களால் காப்பாற்றப்பட்ட அந்தப் பெண், தற்போது தன் தந்தைக்கும் கொலை மிரட்டல் வருவதாகக் கூறியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
