இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டி ஒன்றில் பயணித்த பெண்மணி ஒருவர், பெட்டியின் மின்சார பிளக் பாயிண்ட்டில் எலக்ட்ரிக் கெட்டிலை இணைத்து ‘மேகி’ நூடுல்ஸ் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பயணிகளின் நடத்தை குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. “சமையலறை எங்கும் எப்போதும் இருக்கும்” என்று நகைச்சுவையாகக் கூறிய அந்தப் பெண், தொடர்ந்து அதே கெட்டிலில் 15 பேருக்குத் தேநீர் தயாரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Is this train travel hack to cook food in train is okay?
Is this legal? pic.twitter.com/tuxj9qsoHv— Woke Eminent (@WokePandemic) November 20, 2025
அவரது அருகில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் இதைக் கண்டு சிரிப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் செயலைப் பல நெட்டிசன்கள் பொறுப்பற்றது என்று விமர்சித்தாலும், சிலர் சாமர்த்தியம் என்று பாராட்டியுள்ளனர். இது பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ரயில் பெட்டிகளில் உள்ள மின்சார பிளக் பாயிண்ட்டுகளைப் பயன்படுத்தி, எலக்ட்ரிக் கெட்டில், ஹீட்டர் அல்லது குக்கர் போன்ற அதிக வாட்டேஜ் கொண்ட சாதனங்களில் சமையல் செய்வது என்பது இந்திய ரயில்வேயில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பெட்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள சார்ஜிங் பாயிண்ட்டுகள், கைபேசிகள் மற்றும் லேப்டாப்கள் போன்ற குறைந்த மின்சாரம் தேவைப்படும் சாதனங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவை. இந்தச் சாதனங்கள் பொதுவாக 110V மின்சாரம் மட்டுமே வழங்கும் திறன் கொண்டவை. அதிக சக்தி இழுக்கும் சாதனங்களைப் பயன்படுத்தினால், மின்சுற்று அதிகமாகச் சூடாகி, மின்னணு அமைப்புகள் சேதமடையலாம் அல்லது மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்துக்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பாதுகாப்புப் படை இதுபோன்று அதிக மின்சாரம் இழுக்கும் சாதனங்களைப் பயன்படுத்தியவர்களை கைது செய்துள்ள சம்பவங்களும் முன்னர் நடந்துள்ளன. பயணிகள் சூடான உணவு மற்றும் பானங்களுக்கு ரயிலில் உள்ள பேன்ட்ரி ஊழியர்கள் அல்லது IRCTC-யின் இ-கேட்டரிங் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
