உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் 17 வயது பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த 76 வயது தாத்தாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சிறுமியின் தாயும் சகோதரியும் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது தாத்தாவே வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய போதிலும் அந்தச் சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தனது தந்தைக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன் இது பொய்யான புகார் என்று வாதிட்டார். இருப்பினும் சிறுமியின் தாயார் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறுதியான சாட்சியம் அளித்ததுடன் மருத்துவ அறிக்கைகளும் குற்றத்தை உறுதி செய்தன.
குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டிய தாத்தாவே உறவு முறைக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கொடூரச் செயலில் ஈடுபட்டதை நீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது. மருத்துவச் சான்றுகள் மற்றும் தாயின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு முதியவருக்கு ஆயுள் தண்டனையுடன் ஐம்பத்தையாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
