பாட்னா மாவட்டத்தில் மரைன் டிரைவில் ஒரு புதிய காரில் பயணித்த தம்பதிகள், தங்கள் வாகனம் நேராக கங்கை நதியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் தவறுதலாக பிரேக்கிற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் இருவரும் அதிர்ஷ்டவசமாக படகு ஓட்டுநர்களால் மீட்கப்பட்டனர்.

 

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில், திகா காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஜனார்தன் காட் பகுதியில் நடைபெற்றது. காரில் இருந்தவர்கள் ஆதித்யா பிரகாஷ் மற்றும் அவரது மனைவி. புதிதாக வாங்கிய ஹோண்டா சிட்டி காரில் சுற்றுலா சென்றிருந்த அவர்கள், மரைன் டிரைவில் சிறிது காற்று வாங்கிவிட்டு திரும்பும் போது, கணவர் பிரேக் அடிக்க நினைத்து தவறுதலாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தி விட்டார். இதனால், கார் நேராக சாலையை விட்டு விலகி, கங்கை நதிக்குள் சறுக்கி விழுந்தது.

விபத்தை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் அலறியபடி சத்தம் போட்டனர். உடனடியாக படகு ஓட்டுநர்கள் ராகுல் மற்றும் ரிங்கு, மோட்டார் படகின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரின் கதவுகளை திறந்து, இருவரையும் வெளியே அழைத்து மீட்டனர். காரின் முன்பகுதி முழுவதுமாக நீரில் மூழ்கியிருந்தது. இருப்பினும் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் பற்றிய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் பாதுகாப்பு கவனக்குறைவால் ஏற்படுகிறது என்பதை மீண்டும் நிரூபிக்கின்றது. வாகன ஓட்டும் அனுபவம் இல்லாத நிலையில் வாகனம் ஓட்டுவது உயிருக்கு அபாயம் என்ற எச்சரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த சம்பவம் உள்ளது. போலீசார் தற்போது சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.