இந்திய ரயில்வே சார்பில் பாரத் கௌரவ் என்ற திட்டம் மே 5-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் திருவனந்தபுரத்திலிருந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணிகள் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ரயிலில் சுமார் 800 பேர் பயணம் செய்த நிலையில், பெரும்பாலானவர்கள் முதியவர்கள். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்திலிருந்து 220 பேர் சென்றுள்ளனர். இந்த ரயிலில் சென்ற பயணிகளிடம் 30,000 முதல் 45 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தென்னிந்திய உணவுகள் வழங்கப்படும் என ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஆனால் பெரும்பாலும் வட இந்திய உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டதாக தற்போது முதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு வழிகாட்டிகள் பெரும்பாலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்றும் உடன் வந்த இரண்டு தமிழ் வழிகாட்டிகளுக்கும் சரியாக சொல்ல தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். பயணிகள் தங்குயிருந்த இடத்திற்கும் உணவு சாப்பிட செல்லும் இடத்திற்கும் இடையே நீண்ட தூரம் இருந்ததாகவும் அதற்கான போக்குவரத்து வசதியை செய்து கொடுக்காததால் 2000 ரூபாய் வரை செலவு செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது போன்ற பிரச்சினைகளால் கோவிலில் சரிவர வழிபாடு நடத்த முடியவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.