இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை பதிவு செய்துள்ளது. இனிவரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பேரிடர் மேலாண்மை துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற சில வழிமுறைகளை பார்க்கலாம். அதன்படி உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். வெயிலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறு போன்றவற்றைப் பருகலாம்.

இந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருப்பதோடு பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வெளியில் கிளம்பும்போது காலணிகள் அணிந்து கொள்வதோடு கையில் குடை எடுத்துச் செல்ல வேண்டும். உடல் சோர்வாக இருந்தாலும் மயக்கம் ஏற்படுவது போன்று இருந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். மேலும் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.