மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள ரன்னோட் நகரில் தெருநாய்களின் தாக்குதலால் 3 சிறுமிகள் காயமடைந்த பரிதாபமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வார்டு எண் 4, காட்ரியானா மொஹல்லா பகுதியில் வசிக்கும் 6 வயது ரக்ஷா பிரஜாபதி என்ற சிறுமி, அருகிலுள்ள டிஜே ஒலிப்பை காண வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, திடீரென ஒரு தெருநாய் பின்னால் இருந்து பாய்ந்து கடித்தது. அந்த சிறுமி அலறிக்கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து உதவி செய்தனர்.

கடித்த நாய் அதே பகுதியில் மேலும் 2 குழந்தைகளை தாக்கியது. தாக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில், நாய் குழந்தையின் மீது திடீரென பாய்ந்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாதிக்கப்பட்ட இரண்டாவது குழந்தை தினேஷ் குஷ்வாஹாவின் மகன் தருண் குஷ்வாஹாவும், மூன்றாவது குழந்தை கேவட் சமூகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவனும் ஆகும். தொடர்ச்சியாக 3 குழந்தைகளை ஒரே நாய் கடித்ததால் அந்த பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து, “நாங்கள் எங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகிறோம்” என பல பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தெருநாய்களை பிடித்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி மற்றும் வனத்துறை அதிகாரிகள், நாயைக் கண்டுபிடித்து பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெருநாய்களின் பரிவர்த்தனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.