இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது எனத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 42,000க்கும்  மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நசரல்லாவை இஸ்ரேல் கொலை செய்ததற்கு பின்பு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக நயீம் காசின் பதவியேற்றார்.

இதைத் தொடர்ந்து நயீம் காசின் பதவியேற்ற பின் முதல் முறையாக பேசிய போது, இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து பல மாதங்களுக்கு நிறுத்தி வைக்க தங்கள் அமைப்பால் முடியும் என்று தெரிவித்திருந்தார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நயீம் காசின் இஸ்ரேலுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம். குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பப்பட்டால் அதனை ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்றுக் கொள்ளும் எனவும், இதுகுறித்து எந்தவித நம்பகத்தன்மை உள்ள அறிவிப்பும் இஸ்ரேலிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று இஸ்ரேல் சார்பாக ஆற்றல் துறை அமைச்சர் எலிகோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போர் நிறுத்தம் செய்வதற்கு சில கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படும். என தெரிவித்திருந்தார். 60 நாள் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. பிரதமர் நெதன் யாகு தலைமையில் மந்திரிகள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இருந்த போதிலும் பால்பெக் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார். போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் ஆலோசித்த போதும் தொடர்ந்து தனது தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.