டெல்லியில் வசிக்கும் தீபக் பத்ரா என்ற பெண் தனது குடும்பத்துடன் கோவாவில் உள்ள மந்திரேம் என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது மரியாபெலிஸ் பெர்னாண்டஸ் மற்றும் அவரது மகன், தனது வீட்டிற்கு அருகே செல்லப்பிராணியை கொண்டு வர வேண்டாம் என்று தீபக் பத்ராவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பத்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இது கைகலப்பாக மாறியது. அப்போது பத்ரா, மரியாபெலிஸ் என்பவரின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். இதனை பார்த்த அவரது மகன், தனது அம்மாவை காப்பாற்ற முயன்ற போது கீழே விழுந்து அவரது தோள்பட்டையில் அடிபட்டது.

இதையடுத்து அருகில் இருந்த ஒருவர் மரியாபெலிஸை மீட்டு நாற்காலியில் அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து தீபக் பத்ரா, அதே சாலையில் வேகமாக காரை ஓட்டி வந்து வேண்டுமென்றே மரியாபெலிஸின் மீது மோதினார். இதில் அவர் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மரியாபெலிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   இதையடுத்து பத்ரா அங்கிருந்து தப்பி சென்றார். இது தொடர்பான வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.