கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய புத்தூர் பகுதியில் ரேணுகா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேர் பொருட்கள் வாங்குவது போல நடித்தனர். இதனையடுத்து கடைக்கு வந்த முதியவர் கால்நடைக்கு தீவனம் வாங்கி இரு சக்கர வாகனத்தில் மூட்டையை ஏற்ற முடியாமல் சிரமப்பட்டார். அப்போது ரேணுகா, அவரது மகள் ஆகியோர் முதியவருக்கு உதவி செய்ய வந்தனர்.

இதற்கிடையே பொருட்கள் வாங்க வந்த வாலிபர்கள் உதவி செய்வது போல நடித்து ரேணுகாவின் மகள் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர் உடனே சுதாரித்துக் கொண்டு ரேணுகா சத்தம் போட்டதால் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.