உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி புதியதாக அறிக்கையை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, உணவு மாசு கட்டுப்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவில் மாசுபாடுகள் நடந்தால் ஹோட்டல் உரிமையாளர்கள், தாபா ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் வரும் மாதங்கள் பண்டிகை காலங்கள் என்பதால், அனைத்து ஹோட்டல்களிலும் மற்றும் சிறு சிறு தாபாக்களிலும் உணவு மாசுபாட்டை கண்டறிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு உணவகங்களிலும், தாபாக்களிலும் சென்று உணவு சரியான முறையில் தயாரிக்கப்படுகிறதா, சுத்தமான முறையில் வழங்கப்படுகிறதா என காவல்துறையினர் சரி பார்க்க வேண்டும். ஒவ்வொரு உணவு தயாரிப்பிடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முசோரியில் பழச்சாறில் எச்சில் துப்பி கொடுத்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து டேராடூனில் மற்றொரு கடையில் மாவை தயார் செய்யும் போது ஊழியர் ஒருவர் எச்சில் துப்பிய வீடியோ வைரலாகியது. இது சம்பந்தமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் தன் சிங் ராவ் விழா காலங்களில் உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டை சரி செய்வதே முதன்மையான கடமையாகும் எனக் கூறினார்.