சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே சின்னேரி வயக்காடு செல்லும் பாதையில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் முன்பு நடப்பட்ட புங்கை மரத்தை சமூக ஆர்வலர்களும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மரம் இரவோடு இரவாக வெட்டப்பட்டதால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மரத்திற்கு அருகே வசித்து வரும் கட்டிட உரிமையாளர் கட்டிடம் மறைப்பதாக கூறி மரத்தை வெட்டியது தெரியவந்தது. மேலும் அவர் வருவாய்த்துறை, மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட நிர்வாகத்தினரிடம் அனுமதி பெறாமல் மரத்தை வெட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் புகாரை பெற்றுக்கொள்ளாமல் வருவாய் துறையினரை நாடுங்கள் என கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் மரத்தை வெட்டியதை கண்டித்து உருக்கமான வரிகளுடன் பிளக்ஸ் பேனர் தயார் செய்து மரம் வெட்டிய இடத்தில் வைத்திருந்தனர். அதில் “நீர் தந்தேன்; நிழல் தந்தேன்; மகிழ்வித்தேன்; காற்று தந்தேன்; அனைத்து உயிருக்கும் நன்மை மட்டுமே செய்தேன். மனிதர்களே என்ன தவறு செய்தேன், ஏன் வெட்டினீர்கள்? ஏன் நீங்கள் தடுக்கவில்லை? என உருக்கமான வார்த்தைகள் பேனரில் இடம்பெற்றிருப்பதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.