கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் பக்கிரி சாமி என்பவர் வசித்து வருகிறார். விருதாச்சலம் நகராட்சியில் தி.மு.கவைச் சேர்ந்த பக்கிரி சாமி 30-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் பக்கிரி சாமி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று, விருதாச்சலத்தில் மழலையர் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். இங்கு 150-கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் யுகேஜி படித்து வரும் 6 வயது சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சிறுமியின் உடையில் ரத்த கரைகளும் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, பள்ளியில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து அழுது கொண்டே தெரிவித்துள்ளார். உடனடியாக சிறமியை விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த பள்ளியில் பெண் ஆசிரியைகள் தான் வேலை பார்க்கின்றனர். எனவே போலீசார் தாளாளர் பக்கிரி சாமியின் புகைப்படத்தை காண்பித்து சிறுமியிடம் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமைக்கு அவர்தான் காரணம் என சிறுமி உறுதிப்படுத்தினார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் பக்கிரி சாமியை கைது செய்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அவர் பக்கிரி சாமியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, விருதாச்சலம் நகராட்சி முப்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினரான பக்கிரி சாமி கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி, கட்சிக்கு அவ பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக பக்கிரி சாமி நீக்கி வைக்கப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.