திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் பேரிஜம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். இந்நிலையில் ஏரிக்கு செல்லும் மலை பாதையில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கி பாறை ஆகிய இடங்களை பார்வையிடுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் குட்டியுடன் 5 காட்டு யானைகள் பேரிஜம் ஏரி மதகு பகுதியில் உலா வந்து அங்கேயே முகாமிட்டிருப்பதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அந்த குட்டி யானையால் நடக்க இயலவில்லை. இதனால் அங்கேயே காட்டு யானைகள் சுற்றி தெரிகிறது. எனவே யானைகளின் நடமாட்டம் குறைந்த பிறகு சுற்றுலா பயணிகளுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என கூறியுள்ளனர்.