விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தனது அதிருப்தியான கருத்தை ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக  உள்ள லியோ படத்தின் ட்ரைலர் வெளியான அன்று பல திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதில்,  தமிழகத்தின் சில பகுதிகளில் ட்ரைலரை கொண்டாடிய போது,  சில தியேட்டர்கள் ரசிகர்களால் சேதமடைந்தன.  அந்த வகையில்,  சென்னை ரோகினி தியேட்டர்  கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கும் அளவில் தளபதி ரசிகர்களால்  சேதமடைந்திருந்தது. ஆனால் இதற்காக காவல்துறையில் எவ்வித புகாரும்  திரையரங்கு சார்பில் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து இணையத்தில் பலரும் விஜய் ரசிகர்கள் செய்த இந்த செயலுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.  அந்த வகையில்,  பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்,  ட்ரெய்லரை மொபைலில் அமைதியாக பார்க்கலாம்.  இப்படி கேவலமாக அடித்துப் பிடித்து ஓடும் 90s  மற்றும் 2k பூமர்கள் தமிழகத்தின் அவமான சின்னங்கள்.  எந்த ஒரு தகுதியும் இல்லாமல் சுலபமாக தமிழக முதல்வர் ஆகிவிடலாம் என்ற எண்ணம் நடிகர்களுக்கு வர காரணம் இது போன்ற விசில் அடிக்கும் கூட்டம்தான். 

கேரளாவில் உச்ச நட்சத்திரங்களான மோகன்லால்,  மம்முட்டி பகத்ஃபசில் உள்ளிட்டோருக்கு கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் கிடையாது.  அதை மீறி அவர்கள் ஆரம்பித்து தேர்தலில் நின்றாலும்,  அம்மாநில மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள்.  ஏனென்றால் அவர்களுக்கு சினிமா வேறு அரசியல் வேறு என்ன பிரித்துப் பார்க்க நன்றாக தெரியும்.  அந்த தெளிவு  தமிழக மக்களிடையே கிடையாது.  எவ்வித சுயநினைவும் இல்லாமல்,  சுற்றித் திரியும் இவ்வகையான கூட்டங்கள் இருக்கும் வரையில்,  ஏகப்பட்ட கதாநாயகர்கள் அரசியல் கனவோடு கட்சி ஆரம்பிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.  தற்போது இவருடைய பதிவு வைரலாகி வருகிறது.